வால்பாறை அருகே, காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2018-12-16 22:00 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் சோலைப்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), தொழிலாளி. இவர் நேற்று குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள சூடக்காட்டுக்கு விறகு சேகரிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் 2 காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென அந்த காட்டெருமைகள் ராஜேந்திரனை விரட்டியது.

இதனால் அச்சமடைந்த தொழிலாளி அங்கிருந்து ஓடினார். ஆனால் ஒரு காட்டெருமை தொழிலாளியை மூட்டி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளியை மீட்டு, சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதிக்குள்ளும், எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள சிறுவனச்சோலைகள், சூடக்காடு பகுதிகளுக்கும் விறகு எடுப்பதற்கு செல்லவேண்டாம் என்று பலமுறை எஸ்டேட் பகுதி மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறையின் எச்சரிக்கையை மீறி தொழிலாளி விறகு சேகரிக்க சென்றது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் நாட்களில் பொதுமக்கள் விறகு சேகரிப்பதற்கு வனப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்