மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-16 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

கஜா புயலின் தாக்கத்தால் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் வீடுகள், மின்கம்பங்களும் சேத மடைந்தன. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் பகுதி புயலால் பாதிக்கப்பட்டு 1 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்சாரம் வழங்கவில்லை. ஆதலால் உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், அரசு இலவசமாக வழங்கும் 27 நிவாரண பொருட் களையும் வழங்க வலியுறுத்தியும் நேற்று வரம்பியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளை தலைவர் செந்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வீரசேகர், விட்டுக்கட்டி விவசாய சங்க தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்