மார்கழி மாத பிறப்பையொட்டி குளித்தலை கோவில்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி மாத பிறப்பையொட்டி குளித்தலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-12-16 22:45 GMT
குளித்தலை,

குளித்தலை பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் காலை திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். மார்கழி மாதப்பிறப்பையொட்டி நேற்று காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் திரளா னோர் புனிதநீராடி கடம்பவனேசுவரரை வணங்கி, அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

காலையில் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரரையும், மதியம் அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரரையும், மாலை திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலையில் உள்ள மரகதாசலேசுவரரையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இதன்காரணமாக நேற்று சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் பலர் விரதமிருந்து கடம்பந்துறை காவிரி ஆற்றில் புனிதநீராடி காலை கடம்பவனேசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டு, அய்யர்மலைக்கு நடந்துசென்று மலைமேல் உள்ள ரத்தினகிரீசுவரரை மதியம் வழிபட்டனர். பின்னர் அய்யர்மலையில் நடந்து திருஈங்கோய்மலைக்கு பாதயாத்திரையாக சென்று மாலை மரகதாசலேசுவரரை வழிபட்டனர்.

மார்கழி மாதப்பிறப்பையொட்டி குளித்தலையில் உள்ள நீலமேகபெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை திருப்பாவை பாடப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல மார்கழி மாத பிறப்பையொட்டி லாலாபேட்டை சிவபக்தர்கள் காலை சிவன்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி பல்வேறு வீதிகள் வழியாக லாலாபேட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 

மேலும் செய்திகள்