ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-17 22:45 GMT
ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கணினி வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு கழிப்பறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சதீஷ் கமல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். இந்த போராட்டம் காரணமாக பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பும் கிராம நிர்வாக அதிகாரிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்