மதகடிப்பட்டில் சமையல் மாஸ்டரை கொலை செய்த தொழிலாளி கைது

திருபுவனையில் சமையல் மாஸ்டரை விறகு கட்டையால் அடித்து கொலை செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-17 23:30 GMT
திருபுவனை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனை மதகடிப்பட்டு கடை வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த ஓட்டலில் சமையல் மாஸ்டராக திருமங்கலம் விடத்தகுளம் குருசாமி (வயது 51) என்பவரும், சப்ளையராக திருமங்கலம் தொட்டியபட்டியை சேர்ந்த கண்ணன் (44) என்பவரும் வேலை செய்து வந்தனர். கடந்த 15-ந் தேதி நாகராஜன் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிக்கு சென்றுவிட்டார். இதனால் ஓட்டலை குருசாமியும், கண்ணனும் பார்த்துக்கொண்டனர்.

அன்று இரவு குருசாமிக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விறகு கட்டையால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார். பின்னர் கண்ணன் இரவோடு இரவாக மதுரைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த படுகொலை குறித்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். திருமங்கலம் பஸ் நிலையத்தில் தனது சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்ததன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்ணனை கைது செய்தனர்.

சமையல் மாஸ்டர் குருசாமியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கண்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். இரவில் சமையல் மாஸ்டர் குருசாமியுடன் தங்கி விடுவேன். 15-ந் தேதி ஓட்டல் உரிமையாளர் நாகராஜ் திருச்சிக்கு சென்றுவிட்டார். அதனால் நான் குருசாமியிடம், ஓட்டலை மூடும்படி கேட்டேன். ஆனால் குருசாமி அதற்கு மறுத்துவிட்டார். அப்போது எனக்கும், அவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் அன்றைய தினம் ஓட்டலை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டோம். வியாபாரம் முடிந்ததும் இரவில் நான் மதுக்கடைக்கு சென்று மதுகுடித்துவிட்டு வந்தேன். அப்போது மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து அருகில் கிடந்த விறகு கட்டையால் குருசாமியை தாக்கினேன். அவருடைய தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்ததும் பயந்துபோய் ஓட்டலைவிட்டு வெளியேறி பஸ் ஏறி மதுரைக்கு வந்துவிட்டேன். சொந்த ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ்நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்