காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 103 பேர் கைது

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-17 23:00 GMT
புதுச்சேரி,

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய அரசு மீது ஊழல் புகார் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கண்டித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று புதுவை காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே கூடினார்கள். அங்கிருந்து வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் காமராஜர் சாலை வழியாக வந்து அண்ணா சாலையில் திரும்பி அம்பலத்தடையார் மடத்து வீதி சந்திப்பு அருகே வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பா.ஜ.க.வினர் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

அப்போது பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கரிக் குடோனில் தங்க வைக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்