கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு

கிராமப்பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-17 23:52 GMT
விருதுநகர்,
 
விருதுநகரில் கலெக்டர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய ஆதிதமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி கிராமத்தினருடன் வந்து குப்பான்மடம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் அவர்களுக்கு தகனமேடை,பொது மண்டபம் ஆகியவை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தார்.

மேலும் இப்பகுதி மக்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி சிரமப்படுவதால் பட்டாசு ஆலைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார். அதே போன்று நாட்டாண்மை லட்சுமணன் என்பவர் குப்பான்மடத்தில் உள்ள ஊருணிக்கு தண்ணீர் வருவதற்கு வழியில்லாததால் அதனை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றி உள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளார். மேலும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் குடிநீர் வசதியும் செய்து தர வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர் யூனியனில் உள்ள செங்கோட்டை கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசு கடந்த 1985-ம் ஆண்டு கூட்டு பட்டாவழங்கி உள்ளதால் அதனை பிரித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இதே போன்று அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொடுத்துள்ள மனுவில், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு சாலைவசதி செய்து தரவும், சமுதாய கூடம் கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

மேலும் செய்திகள்