பிரதமராக மோடி மீண்டும் வருவது உறுதி கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே ராகுலை பிரதமராக ஏற்கமாட்டார்கள் வேலூரில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பிரதமராக மோடி மீண்டும் வருவது உறுதி. ராகுலை பிரதமராக அவரது கூட்டணி கட்சியினரே ஏற்க மாட்டார்கள் என வேலூரில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-12-20 23:00 GMT

வேலூர்,

பா.ஜனதா கட்சி பெருங்கோட்ட அளவிலான மண்டல தலைவர்களுக்கு ஒரு நாள் ‘மகிழ்ச்சி முகாம்’ காட்பாடியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேசுவது கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பா.ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. இந்த பலத்தோடு கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் பா.ஜனதா பெறும்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி பலமான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் என்றைக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தாரோ, அன்றே மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்பது உறுதியாகி விட்டது. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு பிரதமர் மோடி எதுவுமே செய்யவில்லை என்று கூறினார். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். பாமர மக்களுக்கு பிரதமர் மோடியின் திட்டங்கள் சென்றடைகிறது.

மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ளாது. சட்டரீதியாக இதற்கு மாநில கட்சி எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு உறுதுணையாக இருப்போம். ஏனென்றால் மேகதாதுவில் அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்கும். மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் அளிக்கவில்லை. ஆய்வறிக்கையை தான் சமர்ப்பிக்க சொல்லி உள்ளது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் பிரதமர் மோடியின் வெற்றி எளிதாகிறது. மோடி மக்களுக்காக தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தது.

அனைத்து மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை நிதி உள்ளது. இதனை, இயற்கை சீற்றத்தின்போது முதற்கட்டமாக பயன்படுத்தி கொள்வார்கள். மாநில அரசு பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி, அதன் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். மத்திய அரசு கேட்கும் தகவல்களை மாநில அரசு கொடுத்தவுடன், கஜா புயல் நிவாரணநிதி வழங்கப்படும்.

தமிழக மக்கள் ஓட்டுபோட்டு பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியது அவருடைய சொந்த கருத்தாகும். இடைத்தேர்தலுக்கு கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை கண்டு பா.ஜனதா அஞ்சுவதில்லை. பொன்.மாணிக்கவேல் பதவியை கோர்ட்டு நீட்டிப்பு செய்துள்ளது. அவருக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்து இயக்க தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதற்கு எந்த கட்சியை சேர்ந்த தலைவரும் கருத்து கூறவில்லை.

பேட்டியின்போது கோட்ட பொறுப்பாளர் ஆர்.பிரகாஷ், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் தசரதன் (வேலூர்), லோகநாதன் (திருவள்ளூர்) மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், மாவட்ட செயலாளர் எஸ்.எல்.பாபு, மாவட்ட தலைவர் (வணிகபிரிவு) தீபக், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்