நலவாழ்வு முகாமில் இருக்கும் கோவில் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வாட்ஸ்-அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு

கோவில் யானைகளின் நெற்றியில் பட்டை, நாமம், வேல் என பளிச்சிடும். இதுவே பக்தி பரவசத்தை தூண்டும். ஆனால் இந்த கோவில்யானையின் நெற்றியில் சிலுவை சின்னம். இது மதநல்லிணக்கமா? என்று எண்ண தோன்றுகிறது அல்லவா? இரண்டு யானைகளில் ஒரு யானையின் நெற்றியில் சிலுவை சின்னத்துடன் காணப்படும் படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

Update: 2018-12-20 23:30 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில், மடங்களை சேர்ந்த 28 யானைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன. இந்த யானைகளுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் நடை பயிற்சி, ஷவர் மேடைகளில் குளியல் என்பது கட்டாயம். அதன் பிறகு சத்தான சமச்சீர் உணவு, ஆயுர்வேதமருந்துகள் என அப்படி விழுந்து, விழுந்து கவனிக்கின்றனர். இதனால் யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாலும் முகாமில் பாசப்பிணைப்பில் பிளிறுகின்றன.

நேற்று 7-வது நாள் முகாமில் காலையில் யானைகளை வரிசையாக அழைத்து சென்று குளிப்பாட்டினர். குளிப்பாட்டியதும் அதன் நெற்றியில் அந்தந்த கோவில் களின் வழிகாட்டுதல் படி அடையாள சின்னங் களை சாக்பீஸ் கொண்டு வரைவது வழக்கம்.இதில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் யானையான ஆண்டாளையும் பாகன் ராஜேஷ் என்பவர் அழைத்து சென்று குளிப்பாட்டி அதன் நெற்றியில் அந்த கோவில் நாமத்தை வரைந்து அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறிது நேரத்துக்கு பிறகு, அந்த ஆண்டாள் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்திருப்பது போல் புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இதனால் பாகன் உள்பட முகாமில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகாமிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாரோ சிலர் ஆண்டாள் யானையை பாகன் குளிப்பாட்டிவிட்டு வரும்போது புகைப்படம் எடுத்து, அதன் நெற்றியில் கிராபிக் செய்து, இந்தசெயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்