விதிகளுக்கு மாறான அறிவுறுத்தல் செல்லாது: சட்டத்தை அமல்படுத்த எழுத்துப்பூர்வ உத்தரவு தேவையில்லை நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி பதிலடி

சட்ட விதிமுறைகளுக்கு மாறான அறிவுறுத்தல்கள் செல்லாது என்றும், சட்டத்தை அமல்படுத்த எழுத்துப்பூர்வ உத்தரவு தேவையில்லை என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2018-12-20 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கும் உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீசாரின் நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கவர்னர் வாய்மொழியாக பிறப்பித்த உத்தரவினை செயல்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவு எழுத்துப்பூர்வமாக வந்தால் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தினார்.

இந்த விஷயத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து நேற்று கவர்னர் கிரண்பெடி போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக நானே நேரில் கள ஆய்வுக்கு சென்று கண்டேன். மக்கள் ஹெல்மெட் அணியாததால் விபத்தில் இறப்பதை தடுக்க ஹெல்மெட் கட்டாயம். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமுறை குறித்த சட்டங்களை செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு தேவையில்லை. அதற்கு மாறாக எந்த உத்தரவும் நிறைவேற்ற முடியாது.

சாலை பாதுகாப்பு விதி முறைகளை எந்தவித பயமும் இன்றி காவல்துறை, போக்குவரத்துதுறையினர் நிறைவேற்றவேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சட்ட விதி முறைகளுக்கு மாறாக எந்த அறிவுறுத்தலும் செல்லுபடி ஆகாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்