உத்தரபிரதேசத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

உத்தரபிரதேசத்தில் இறந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-12-21 23:00 GMT
கருங்கல்,

கருங்கல் அருகே தெருவுக்கடை, பெரம்புவிளையை சேர்ந்த குருசு மெய்யில் மகன் காட்வின் ஆல்பர்ட் (வயது 32), ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஜோஸ்லின் ஜெனிஜா என்ற மனைவியும் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

காட்வின் ஆல்பர்ட் காஷ்மீரில் வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து பயிற்சிக்காக உத்தரபிரதேசம் ஜான்சி பகுதியில் உள்ள முகாமுக்கு சென்றார்.

இந்தநிலையில், கடந்த 18-ந் தேதி காட்வின் ஆல்பர்ட் பயிற்சி முகாமில் இருந்து அலுவலக தேவைக்காக வாகனத்தில் சென்ற போது, தவறி விழுந்து இறந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து, இறந்த ராணுவ வீரரின் உடல் நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து வாகனத்தில் சொந்த ஊரான பெரம்புவிளைக்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவியும், குழந்தைகளும், உறவினர்களும் கதறி அழுதனர். தொடர்ந்து, ராணுவ வீரரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், காட்வின் ஆல்பர்டின் உடல் ராணுவ மரியாதையுடன் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது தந்தை குருசு மெய்யிலும் முன்னாள் ராணுவ வீரர். இவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்