கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 75 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-21 22:00 GMT
தேனி,

கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு கழிப்பிடம், குடிநீர் மற்றும் மின்சார வசதி வழங்க வேண்டும். இ-அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்களே மின் ஒப்பமிட்டு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இணையவழி சேவைக்கு உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் செலவின தொகை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து வகை சான்றுகளையும் கிராம நிர்வாக அலுவலர்களே வழங்குவதற்கு உரிய அரசாணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கிராம நிர்வாக அலுவலர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்