திருமானூரில் மணல் குவாரியை அகற்றக்கோரி அம்மனிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

திருமானூரில் மணல் குவாரியை அகற்றக்கோரி அம்மனிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-21 22:15 GMT
கீழப்பழுவூர்,

திருமானூர் கிராமத்தின் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் நீர்பாசன திட்டத்தின் வாயிலாக நீரும், மணல் குவாரி வாயிலாக மணலும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர் மற்றும் மணல் இரண்டையும் ஆற்றில் இருந்து எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த மணல் குவாரி கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த திருமானூர் கிராம மக்கள் அம்மனிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் மணல் குவாரியை மூடக்கோரி கோவில் பூசாரியிடம் மனு கொடுத்தனர். பூசாரி அந்த மனுவை வாங்கி அம்மன் சிலையின் அருகில் வைத்தார். பின்னர் மணல் குவாரியை மூடும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

திருமானூர் கிராமத்தில் மணல் குவாரியை மூடக்கோரி பல முறை போராட்டங்கள் நடந்து இருப்பதால் இம்முறை அசம்பாவிதங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனங்களும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்