சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான செய்திகளை பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்து உள்ளார்.

Update: 2018-12-21 22:45 GMT
நாமக்கல், 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சமீப காலங்களில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் இரு பிரிவினரிடையே வன்மத்தை தூண்டும் விதமாகவும், பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வகையிலும் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை சிலர் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், புதுச்சத்திரம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் இதர சமூகம் குறித்து தவறான பதிவுகளை பதிவிட்டோர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் இனிவரும் காலங்களில் சாதி மற்றும் மதத்தை பற்றி இழிவாகவோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையிலோ பதிவுகளை பதிவிடுவோர் மீதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை ‘மார்பிங்’ செய்து ஆபாசமாக பரப்புவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் அதில் வரும் பதிவுகளை சரியான தகவல்கள்தானா? என ஆராய்ந்த பிறகு, அதை பதிவேற்றம் செய்யவோ அல்லது பிறருக்கு அனுப்பவோ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்