கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள் 110 பேர் கைது

நாமக்கல்லில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-21 22:45 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 177 பேர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதோடு, பொதுமக்களின் விண்ணப்பங்களும் தேக்கம் அடைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், வட்ட தலைவர்கள் செந்தில்கண்ணன், அன்புராஜ், குமார், உதயகுமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார், கிராம நிர்வாக அலுவலர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 110 பேரை, தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்