சேலம் கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட முயற்சி 174 பேர் கைது

சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 174 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-21 22:30 GMT
சேலம், 

கூடுதல் பணிக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பெரியார் மேம்பாலம் வழியாக சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் அருகில் கூடினர். பின்னர் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து 37 பெண்கள் உள்பட 174 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் மோகன்ராஜ் கூறும் போது, எங்கள் கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. எனவே கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும், என்றார்.

போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் அருகில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்