பாவூர்சத்திரத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: நெல்லை-செங்கல்பட்டு ரெயிலுக்கு வரவேற்பு தினசரி இயக்க கோரிக்கை
நெல்லை -செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு தெரிவித்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
பாவூர்சத்திரம்,
நெல்லை -செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு தெரிவித்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ரெயில்
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னை மற்றும் கோவைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் நெல்லை -செங்கல்பட்டு சிறப்பு கட்டண ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.19 மணிக்கு வந்தது.
பயணிகள் வரவேற்பு
புதிய ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் வந்தனர். தொழில் அதிபர் சேவியர் ராஜன் தலைமையில் ரெயிலை இயக்கிய டிரைவர்கள் மற்றும் அந்த ரெயிலில் பாவூர்சத்திரத்தில் இருந்து முதன்முதலாக பயணம் செய்த பயணி செந்தில் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், நிலைய அதிகாரி வில்சன் தனராஜ், நிலைய அலுவலர்கள் அசுவதி, சண்முகவடிவு, பயணிகள் சார்பில் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் ஆனந்த், தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் காமராஜ், முத்தையா, இசக்கிமுத்து, இம்மானுவேல், லிங்கம், கபில், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினசரி இயக்க வேண்டும்
மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க வேண்டும். மேலும் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் வரை இந்த ரெயிலை நீட்டிக்க வேண்டும் என்று பாவூர்சத்திரம் பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.