நாடாளுமன்ற தேர்தலில் ரபேல் போர் விமான ஊழல் முக்கிய இடம் பிடிக்கும் பெங்களூருவில், ப.சிதம்பரம் பேட்டி

அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் முக்கிய இடம் பிடிக்கும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2018-12-21 23:30 GMT
பெங்களூரு, 

அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் முக்கிய இடம் பிடிக்கும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

ப.சிதம்பரம் பேட்டி

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற கூட்டு குழு

2015-ம் ஆண்டு ரபேல் போர் விமான கொள்முதல் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் நாங்கள் சில கேள்விகளை எழுப்பினோம்.

இந்த ஊழல் குறித்து சிறப்பு விசாரணை குழு அல்லது நாடாளுமன்ற கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த ரபேல் போர் விமான கொள்முதலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ரத்து செய்துவிட்டார்

அந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்துவிட்டார். அதற்கு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டார். 126 விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அதை மாற்றி 26 விமானங்களை மட்டும் கொள்முதல் செய்ய இந்த மத்திய அரசு முடிவு செய்தது ஏன்?.

இந்திய விமானப்படையின் தேவையை விட குறைவாக விமானங்களை கொள்முதல் செய்வது ஏன்?. சொந்த நாட்டில் போர் விமானங்களை தயாரிக்கும் எச்.ஏ.எல். நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணித்தது ஏன்?.

126 விமானங்கள்

ஒரு விமானத்தின் விலை ரூ.1,670 கோடி என்று அந்த விமானத்தை தயாரிக்கும் நிறுவனமான டசால்ட் தெரிவித்துள்ளது. 3 மடங்கு அதிக விலை கொடுத்து அந்த விமானங்களை கொள்முதல் செய்வதன் அவசியம் என்ன?.

விலை குறைவாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தால் 126 விமானங்களை கொள்முதல் செய்திருக்க முடியும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் முக்கிய இடம் பிடிக்கும்.

காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியில் ரபேல் விவகாரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அனைவரும் இணைந்து வெற்றியை பெறுவோம்.

மேகதாது திட்டம் குறித்து நான் பேச விரும்பவில்லை. இது 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள விவகாரம். இதை சட்டரீதியாக தீர்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம்.

108 விவசாயிகள் தற்கொலை

மராட்டிய மாநிலத்தில் ஒரு மாவட்டத்திலேேய 108 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 10 கோடி விவசாயிகளில் 50 சதவீதம் பேர் கடனில் சிக்கியுள்ளனர். ரூ.2 லட்சம் வரை விவசாய கடனை தள்ளுபடி செய்வது நல்ல விஷயம்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் செய்திகள்