கல்லூரி மாணவிகளிடம் பணம் பறித்த போலி பெண் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்

அம்பர்நாத்தில் கல்லூரி மாணவிகளிடம் பணம் பறித்த போலி பெண் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்.

Update: 2018-12-21 23:30 GMT
அம்பர்நாத், 

அம்பர்நாத்தில் கல்லூரி மாணவிகளிடம் பணம் பறித்த போலி பெண் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்.

கல்லூரி மாணவிகள்

தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சோ்ந்த கல்லூரி மாணவி ஆஸ்தா. இவரது தோழி ஜெயா.

சம்பவத்தன்று 2 பேரும் உரிய டிக்கெட் இல்லாமல் அம்பர்நாத்தில் இருந்து கல்யாணுக்கு மின்சார ரெயிலில், முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகர் என கூறி கல்லூரி மாணவிகள் 2 பேருக்கும் அபராதம் விதித்தார்.

ஆனால் அவர் அதற்கான ரசீது கொடுக்கவில்லை. மாணவிகள் ரசீது குறித்து கேட்ட போது அவர் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

போலி டிக்கெட் பரிசோதகர்

இந்தநிலையில், சில நாட்கள் கழித்து ஆஸ்தா அதே பெண்ணை அம்பர்நாத் ரெயில்நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் பார்த்தார். உடனே அவர் அந்த பெண்ணிடம் அபராதம் விதித்ததற்கான ரசீதை கேட்டார். அப்போது அந்த பெண் போலி ரசீது ஒன்றை கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த மாணவி அந்த பெண் குறித்து ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவித்தார். இதையடுத்து 2-வது பிளாட்பாரத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை பிடித்தனர்.

விசாரணையில், அந்த பெண் அம்பர்நாத் பகுதியை சேர்ந்த அசா அஸ்வத் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரியவந்தது. ரெயில்வே போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்