முன்விரோதத்தில் மின் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்: தந்தை-மகன் கைது

கோட்டூர் அருகே முன்விரோதத்தால் மின் ஊழியரை தாக்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மின் ஊழியரை தாக்கிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-21 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பாலையூர் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். இதில் கெழுவத்தூரை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் சத்தியகமல் (வயது 28) என்பவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாலையூரை சேர்ந்த சிவப்பிரகாசம் (55), அவருடைய மகன்கள் மகேஷ்(28), சரத்குமார் ஆகியோர் அங்கு வநது முன்விரோதம் காரணமாக சத்தியகமலை மின்கம்பத்தில் இருந்து இறங்க சொல்லி அவரை தாக்கினர். பின்னர் அவரது கைகளை கட்டி வீட்டுக்கு இழுத்து சென்று அங்கிருந்த டிராக்டரில் கட்டி வைத்து தாக்கினர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியகமலை மீட்டு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊருக்கு மயங்கிய நிலையில் வந்த சத்தியகமலை கெழுவத்தூர் கிராம மக்கள் பார்த்து கேட்டுள்ளனர். அதற்கு தான் தாக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கெழுவத்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையூரை சேர்ந்த சிவப்பிரகாசம், அவருடைய மகன் மகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றொரு மகன் சரத்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும், மின் ஒப்பந்த ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து மற்ற மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காயம் அடைந்த சத்தியகமல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்