முத்திரையிடாத எடை கருவிகளை பயன்படுத்தினால் அபராதம் வணிகர்களுக்கு, தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

முத்திரையிடாத எடை கருவிகளை பயன்படுத்தும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-12-22 22:30 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானசம்பந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் முத்திரையிடாத எடை கருவிகளை வணிகர்கள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக பயன்படுத்தப்படும் எடை அளவுகள் முத்திரையிடப்படுவது இல்லை என்றும் புகார்கள் வருகின்றன. முத்திரையிடப்படாத எடை கருவிகளை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ஆய்வின்போது முத்திரையிடப்படாத எடை கருவிகளை வணிகர்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதோடு அதை பயன்படுத்திய வணிகர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின்படி பொட்டலங்களின் மீது அதை தயாரித்தவர், பொட்டலமிடுபவர், இறக்குமதி செய்பவர் பெயர் மற்றும் முகவரி, பொருளின் பெயர், நிகர எடை, எண்ணிக்கை, தயாரித்த மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்வு எண் ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இந்த விவரங்கள் இல்லாத பொட்டல பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டாம். விவரங்கள் இல்லாத பொட்டல பொருட்களை விற்பனை செய்தால் அவற்றை பறிமுதல் செய்வதோடு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்