தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை பயணிகள் பீதி

தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சை ஒற்றை யானை வழிமறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். கிராமம் அருகில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-12-22 23:15 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்டது வட்டவடிவுப்பாறை. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டிருந்தன. அவற்றை வனத்துறையினர் நேற்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினார்கள். இந்த நிலையில் அவற்றில் இருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை கலகோபசந்திரம் என்ற இடத்திற்கு வந்தது. அந்த யானை தேன்கனிக்கோட்டை-கெலமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. ஒற்றை யானை சாலையில் வருவதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியில் அலறி அடித்தபடி ஓடினார்கள். மோட்டார்சைக்கிளில் சென்ற பலரும் வாகனங்களை திருப்பி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அந்த நேரம் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஒற்றை யானை வழிமறித்தது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதனால் யானை அங்கிருந்து நகன்று, சாலையில் சென்றது. இந்த ஒற்றை யானையை கண்ட வாகன ஓட்டிகள் பலரும் அதிர்ச்சியில் வாகனங்களை திருப்பிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒற்றை யானை தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில், 25-க்கும் மேற்பட்ட யானைகளும், போடூர்பள்ளம் வனப்பகுதியில் நான்கு யானைகளும் உள்ளன. இவற்றை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான கும்ளாபுரம், மதகொண்டப்பள்ளி வனப்பகுதி வழியாக மேலும் 15 யானைகள் வந்தன.

இந்த யானைகள் தின்னூர் அருகே தைலதோப்பில் முகாமிட்டிருந்தன. அவற்றை வனத்துறையினர் விரட்டினார்கள். அவை ஓசூரை அடுத்த காரப்பள்ளி அருகில் உள்ள மாந்தோப்புக்கு சென்றன. அந்த யானைகள் அங்குள்ள குட்டை ஒன்றில் ஆனந்த குளியல் போட்டன. யானைகளின் அட்டகாசத்தால் ஓசூர் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்