அனுமதியின்றி அமைக்கப்பட்ட கால்வாய் தடுப்புகளை அகற்றிய விவசாயிகள் களக்காடு அருகே பரபரப்பு

களக்காடு அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட கால்வாய் தடுப்புகளை விவசாயிகள் அகற்றினர்.

Update: 2018-12-22 22:15 GMT
களக்காடு, 

களக்காடு அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட கால்வாய் தடுப்புகளை விவசாயிகள் அகற்றினர்.

பச்சையாறு அணை

நெல்லை மாவட்டம் களக்காடு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 115 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

களக்காடு அருகே உள்ள பத்மநேரி இடையன்குளம், நெடுவிளை, ஆதிச்சபேரி, எருக்கலைப்பட்டி பகுதியில் உள்ள 9 குளங்களுக்கும், பச்சையாறு அணையில் இருந்து பத்மநேரி கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி பச்சையாறு அணை பிசான சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இடையன்குளம் உள்பட 9 குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் பத்மநேரி கால்வாயில் மணல் மூட்டைகளால் ஆன தற்காலிக தடுப்புகளை அமைத்து, பச்சையாறு அணையின் பாசனத்தில் இடம்பெறாத பூலம் குளத்திற்கு தண்ணீரை திருப்பியதாக கூறப்படுகிறது.

தடுப்புகள் அகற்றம்

இதனை அறிந்த இடையன்குளம், நெடுவிளை, எருக்கலைப்பட்டி, ஆதிச்சபேரி உள்பட சுற்றுவட்டார விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர், அனுமதியின்றி அமைக்கப்பட்ட தடுப்புகள் அருகே திரண்டனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் இந்திரா மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டை தடுப்புகளை அகற்றினர். இதற்கிடையே பூலம் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் அங்கு திரண்டு வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்