மோட்டார் சைக்கிள் மீது மோதிய பஸ் வயலுக்குள் பாய்ந்தது; 50 பயணிகள் உயிர் தப்பினர் தென்திருப்பேரை அருகே பரபரப்பு

தென்திருப்பேரை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Update: 2018-12-22 22:00 GMT
தென்திருப்பேரை,

தென்திருப்பேரை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

செங்கல் சூளை ஊழியர்

திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 24). இவர் தென்திருப்பேரையில் உள்ள செங்கல் சூளை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

தென்திருப்பேரை அருகே ராஜாங்கபுரம் விலக்கில் ஸ்ரீதர் வலது புறமாக திரும்ப முயன்றார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

வயலுக்குள் பாய்ந்த பஸ்

மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய பஸ், சாலையின் வலது புறமுள்ள கிறிஸ்தவ ஆலய காம்பவுண்டு சுவரில் மோதி, சாலையின் இடது புறமுள்ள வயலில் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக சாலையில் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த சுமார் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்க பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்