காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாகன விபத்துகளில் 3 பேர் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாகன விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.

Update: 2018-12-22 20:22 GMT
படப்பை,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ( வயது 29). இவரது மனைவி பார்கவி (வயது27). இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த கிஷ்கிந்தா தர்காஸ் பகுதியில் உள்ள வின்னரசி தெருவில் வசித்து வந்தனர். சந்தோஷ் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் தன்னுடைய நண்பரான படப்பையை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நடுவீரப்பட்டில் இருந்து படப்பை நோக்கி நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.

படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சந்தோஷ், ரஞ்சித்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மணிமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரஞ்சித்குமார் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலவலம்பேட்டை

காஞ்சீபுரம் மாவட்டம் மேலவலம்பேட்டையை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி வசந்தா (வயது 45). இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற ஜீப் அதிவேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் சங்கர். இவர் ஸ்ரீபெரும்புதூர் அங்களம்மன் கோவில் அருகே பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பாபு (19). இவர் பூக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து கடை வேலைகளை கவனித்து வந்தார். நேற்று இரவு பாபு ஏரிக்கரை வழியாக சென்றபோது திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்ற மணல் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த பாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய மணல் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்