சாத்தூரில் வனத்துறையினர் அதிரடி: கடையில் பதுக்கிய யானை தந்தங்கள் பறிமுதல் கடத்த முயன்ற 7 பேர் கைது

சாத்தூரில் கடையில் பதுக்கிய யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-22 22:05 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம், நெல்லை மாவட்டம் முண்டந்துறை வனச்சரகம் மற்றும் மேகமலை வனச்சரகம் என மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன.

இந்த நிலையில் வனப்பகுதிகளில் யானைகளை கொன்று ஒரு கும்பல் தந்தங்களை கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அந்த கும்பலை பிடிக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்த அசோக் (வயது42) என்பவருக்கு தந்தங்கள் கடத்துவதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

எலக்ட்ரீசியனான அசோக், சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரில் டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அதிகாரி வேலுச்சாமி தலைமையில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

பறிமுதல் செய்த தந்தங்களானது தலா ஒன்றரை அடி 2 நீளமுடையது. இதனைதொடர்ந்து எலக்ட்ரீசியன் அசோக்கை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதை தொடர்ந்து விருதுநகர் பகுதியை சேர்ந்த முறுக்கு வியாபாரியான இப்ராகிம் (47), ஆட்டோ டிரைவர்கள் பாண்டி(34), மாரிமுத்து(33), டாஸ்மாக் ஊழியர் மாரிமுத்து (42), பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியர் ராஜகுரு(69), ஜஸ்டின் பிரபாகரன்(35) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் யானை தந்தங்களை கடத்தி வந்து, விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான செல்வகுமார் உள்பட 2 பேரை தீவிரமாக தேடிவருகிறார்கள். அவர்கள் மூலம்தான் தந்தங்கள் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தந்தத்துக்காக எத்தனை யானைகளை கொன்றார்கள், தந்தங்களை எங்கெங்கு கடத்திச் சென்று விற்றார்கள்? என்று விசாரணை நடத்தப்படுகிறது.

சாத்தூரில் கைது செய்யப்பட்ட அசோக்கின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லூர் ஆகும். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூருக்கு வந்துள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

சாத்தூரில் எலெக்ட்ரானிக் கடை நடத்தும் இடங்களை அடிக்கடி அசோக் மாற்றி வந்துள்ளார். எந்த இடத்திலும் கடைக்கு பெயர் பலகை எதுவும் வைத்தது கிடையாதாம். மேலும் கடையை பெரும்பாலான நேரங்களில் பூட்டியே வைத்திருந்துள்ளார். கண்துடைப்புக்கு எப்போதாவதுதான் கடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சொந்தமான காரில் உலா வந்துள்ளார். மேலும் 5 வருடத்துக்கு முன்பு சொந்தமாக வீடு வாங்கி அங்கு வசித்து வந்துள்ளதாகவும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்