லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-12-28 23:00 GMT
ஈரோடு, 

பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் அருக்காணி (வயது 60). இவருடைய கணவர் பழனிச்சாமி. இவர் இறந்து விட்டார். அருக்காணி கூலி வேலை செய்துவந்த நிலையில், விதவை உதவித்தொகை பெறுவதற்கான பரிந்துரை சான்று வேண்டி பெருந்துறை “அ“ கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.


அப்போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்திராணி (65) சான்று வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அருக்காணி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

பின்னர் போலீசாரின் ஆலோசனைப்படி ரூ.200 லஞ்சம் கொடுக்க முயன்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்திராணியை கையும், களவுமாக பிடித்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ‘லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக இந்திராணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து,’ உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் இந்திராணி கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது கிராம நிர்வாக அதிகாரி பணியில் இருந்து இந்திராணி ஓய்வுபெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்