எந்த நேரமும் விழிப்பாக இருக்கிறார்களா? என சோதனை செய்ய இருளில் பதுங்கியிருந்து போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்த சூப்பிரண்டு
போலீசார் இரவு நேரங்களில் விழிப்புடன் சோதனை செய்கிறார்களா? என்பதை அறிய சாதாரண ஆள் பேசுவதாக போனில் பேசி 2 இடங்களுக்கு வரவழைத்த போலீஸ் சூப்பிரண்டு இருளில் பதுங்கியிருந்து அவர்களது நடவடிக்கையை கண்காணித்தார்.;
திருவண்ணாமலை,
வித்தியாசமான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிபிசக்ரவர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் வித்தியாசமான முறையில் ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மணல் கடத்தல் தடுப்பு, சாராய ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் இரவு நேரங்களில் அவ்வபோது ரோந்து பணியில் ஈடுபடுகிறார். மேலும் சில சமயங்களில் தனியாகவும் மோட்டார்சைக்கிளில் வலம் வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகர போலீசார் சரியாக பணியாற்றுகிறார்களா? என கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 100’ என்ற அவசர உதவி எண்ணிற்கு போன் செய்து உள்ளார். அதில் பேசியவர்களிடம் சாதாரண நபர் பேசியது போன்று, “திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அருகில் இருந்து பேசுவதாகவும், தன்னை சிலர் கத்தியால் வெட்டி விட்டதாகவும் ”கூறியுள்ளார்.
இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து உள்ளனர். ஆனால் அங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபரின் எண்ணிற்கு திருவண்ணாமலை போலீசார் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது பேசிய அவர், தான் பதற்றத்தில் பேசியதால் இடத்தை மாற்றி கூறியதாகவும், திருவண்ணாமலை சாரோனில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகில் நடந்து செல்லும் போது மது போதையில் இருந்த 4 பேர் தன்னை கத்தியால் வெட்டி விட்டனர் என்றும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மற்றும் அதிரடி படை குழுவினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள புதரில் மறைந்து இருந்து போலீசார் வருகிறார்களா என்று பார்வையிட்டனர். 10 நிமிடத்தில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
மேலும் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். கத்தி வெட்டு காயத்துடன் யாரும் இருக்கிறார்களா என்று தீவிரமாக தேடிப் பார்த்தனர். யாரும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
அவர்களை மேலும் சோதிக்க விரும்பாத போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தான் இருளில் மறைந்து இருந்த இடத்தில் இருந்து அதிரடி படையினருடன் வெளியே வந்தார். பின்னர் அவர்களிடம் இரவு பணியில் எவ்வாறு பணியாற்றுகிறீர்கள், எந்த நேரமும் விழிப்பாக இருக்கிறீர்களா? என்று சோதிக்கத்தான் போனில் பேசினேன் என்றார். இரவு நேரத்திலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாக பணியாற்றிய போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். பின்னர் அவர்களுடன் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்து அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்து அவரும் அருந்தினார்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.