பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: அரசு பள்ளியை சூறையாடி மாணவர்கள் ரகளை மேஜை, நாற்காலிகளை உடைத்து நொறுக்கினர்

பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளியில் மேஜை, நாற்காலிகளை உடைத்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-04 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மி‌ஷன் வீதியில் கல்வே கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு பதிவியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வந்த 207 மாணவர்கள் பெரியார் நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களில் சிலர் சரியாக வகுப்புகளுக்கு வராமலும், படிக்காமலும் இருந்து வந்துள்ளனர். ஒரு சில மாணவர்கள் போதைப்பழக்கத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அரையாண்டுத்தேர்வு முடிவு பெற்றதை அடுத்து பள்ளி சார்பில் பெற்றோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும், பெற்றோர்களுக்கு உங்களது படிப்பு, ஒழுக்கம் குறித்து தெரிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கூட வளாகத்திற்கு சில மாணவர்கள் வந்தனர். திடீரென வகுப்பறைகளில் புகுந்து ஜன்னல் கண்ணாடிகள், மின்விசிறி, மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை உடைத்து சூறையாடினர். மேலும் பரிசோதனை கூடத்திற்குள் புகுந்து அங்கிருந்த உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர். பள்ளிக்கூடத்துக்கு வந்த ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லை. ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தாததால் நாங்கள் இங்கு சிக்கிக்கொண்டோம். மாணவர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பெற்றோரை வரவழைத்து இதனை தெரிவிக்கலாம் என முடிவு செய்ததால் ஆத்திரம் அடைந்து பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்