நாகர்கோவிலில் மாயமான வியாபாரி கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மீட்பு

நாகர்கோவிலில் மாயமான வியாபாரி கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2019-01-04 22:49 GMT

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு நேற்று மதியம் குளிக்க சென்ற பக்தர்கள் குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கோவில் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாகர்கோவில், கோட்டார் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது45) என்பது தெரியவந்தது. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன் களும் உள்ளனர். ராஜன் பறக்கை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜன் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில், அவர் கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தார்.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஜன் குளத்தில் குளிக்க சென்ற போது, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்