கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அனுமதி மறுத்ததாக கூறி பெண்கள் சாலை மறியல் 102 பேர் கைது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அனுமதிக்க மறுத்ததாக கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 102 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-07 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே அவர்கள் பெற்ற கடனுக்கான தவணை தொகையினை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை வசூல் செய்யும் நடவடிக்கையினை 6 மாத காலங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பையும் மீறி நிதி நிறுவனங்கள், வங்கிகள், மகளிர்் சுய உதவி குழுக்கள் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மன்னார்குடி, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் புகார் அளிக்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. எனவே 5 பேர் மட்டுமே சென்று மனு அளிக்கலாம் என தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த பெண்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 96 பெண்கள் உள்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்