கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

கால்நடைகளை கொன்ற புலியை கேரள வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

Update: 2019-01-16 22:30 GMT
கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாலுகா தமிழக எல்லையில் அமைந்து உள்ளது. இத்தாலுகாவுக்குட்பட்ட நூல்புழா பேரூராட்சி மூலங்காவு, தேலம்பற்றா கிராமங்களுக்குள் கடந்த 1 வாரத்துக்கு முன்பு புலி ஒன்று புகுந்தது. இந்த சமயத்தில் கால்நடைகளை புலி கடித்து கொன்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மூலங்காவு கிராமத்தை சேர்ந்த பாப்பச்சன் தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டார். சிறிது நேரத்தில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் மாட்டை தேடி பாப்பச்சன் ஓடினார். அப்போது புலி ஒன்று பசுமாட்டை கடித்து கொன்றதை கண்டார். இதனால் சத்தம் போட்டவாறு பாப்பச்சன் உள்பட அப்பகுதி மக்கள் ஓடினர். இதனால் புலி அங்கிருந்து தப்பி ஓடியது.

இதுகுறித்து சுல்தான்பத்தேரி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மாட்டுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அனில் என்பவரது மாட்டை புலி கடித்து கொன்றது. இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுல்தான்பத்தேரி போலீசார் மற்றும் வனச்சரகர் அஜித்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனத்துறை சார்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும் அதன் உள்ளே இறந்த பசு மாடுகளின் இறைச்சிகளும் வைக்கப்பட்டன.

நள்ளிரவு 12 மணிக்கு அப்பகுதிக்கு வந்த புலி வனத்துறையினரின் கூண்டுக்குள் வைத்த மாட்டு இறைச்சியை சாப்பிட உள்ளே புகுந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கூண்டுக்குள் சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த புலி கடுமையாக உறுமியது. இதைதொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு ஓடி வந்தனர். அப்போது சுமார் 10 வயது பெண் புலி கூண்டுக்குள் இருந்தது. மேலும் அதன் வாயில் 4 பற்கள் இல்லாமல் இருந்தது. இதனால் வேட்டையாட முடியாமல் புலி ஊருக்குள் வந்து கால்நடைகளை கடித்து கொன்றது தெரியவந்தது.

மேலும் செய்திகள்