ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை : மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி -பா.ஜனதா குற்றச்சாட்டு

ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை என்றும், மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது.

Update: 2019-01-16 23:02 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை, முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக கூறி அவர்கள் (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்) கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நேற்று நடைபெறவில்லை.

இதனால் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்துள்ளதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லி, அரியானாவில் முகாமிட்டுள்ள எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று(வியாழக்கிழமை) பெங்களூருவுக்கு திரும்ப உள்ளனர். இதற்கிடையில், காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. ஆபரேஷன் தாமரையும் நடக்கவில்லை. ஆனால் மக்களை திசை திருப்பவும், பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு கூறி நாடகமாடுகின்றனர்.

எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவுடன் தொடர்பில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்