சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு

சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-17 00:10 GMT
சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கோதுமை, உரம், சிமெண்டு, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் உள்பட பல மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை சத்திரம் ரெயில்வே தண்டவாளத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே இறந்து கிடந்தவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டதால் சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஈஸ்வரன், செவ்வாய்பேட்டை மற்றும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை வரவழைத்து அடையாளம் காட்டி போலீசார் விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தம் உறைந்த நிலையில் கத்தி ஒன்று கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து இந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்த பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை போலீசாரிடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. இரு போலீசாரும் இந்த இடம் தங்கள் பகுதி எல்லை இல்லை என்று கூறினர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்ற ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்