கணவரை மீட்டு தர வேண்டும் கலெக்டரிடம், மலேசிய பெண் கோரிக்கை

கணவரை மீட்டு தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மலேசிய பெண் கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2019-01-21 23:00 GMT
திருவாரூர்,

கணவனை மீட்டு தர வலியுறுத்தி மலேசியாவை சேர்ந்த துர்காதேவி என்பவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறேன். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்்ந்த ராஜ்குமார் என்பவர் தனியார் நிறுவன டிரைவராக சிங்கப்பூரில் பணியாற்றினார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாக தகவல் அறிந்தேன்.

இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் அளித்தேன். பின்னர் மலேசியாவில் இருந்து புறபட்டு நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு போலீசாருடன் நேரில் சென்றேன். ஆனால் அங்கு ராஜ்குமார் இல்லை. அவரது உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ராஜ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே எனது கணவர் ராஜ்குமாரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்கா தேவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்்வதற்கான ஏற்பாடுகளை துர்காதேவி ரமீஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்