விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-21 23:00 GMT
விளாத்திகுளம்,

விளாத்திகுளத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் கோவிலில் பூஜைகள் முடிந்ததும், வழக்கம்போல் கோவிலை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். கோவிலில் பணியாற்றும் இரவு நேர காவலாளிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மாத்திரை சாப்பிட்டு விட்டு, அயர்ந்து தூங்கி விட்டார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கோவிலின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், கோவிலில் சுவாமி சன்னதி முன்புள்ள இரும்பு உண்டியலை தூக்கிச் சென்று, கோவில் வளாகத்தில் மறைவான இடத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள், அந்த உண்டியலை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

அதிகாலையில் கண்விழித்த காவலாளி, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, கோவில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கோவிலில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதில், கொள்ளையர்களின் உருவம் மங்கலாக பதிவாகி உள்ளது. அதன்மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17-ந்தேதி வருசாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒலிப்பெருக்கி கருவியை மர்மநபர்கள் திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோவிலில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, முறையாக பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்