மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-21 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 485 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் உலக சிக்கன நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற 17 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஷ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை உரியம்பட்டி ஒத்தவீடு ஊர் பொதுமக்கள் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 175 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நாங்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முள்ளிக்காப்பட்டி ரேஷன்கடைக்கு சென்றுதான் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றோம். இதனால் ரேஷன் பொருட்களை வாங்க செல்லும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்ற னர். எனவே எங்கள் கிராமத்தில் பகுதிநேர அங்காடி மையம் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆவுடையார்கோவில் தாலுகா பொன்பேத்தி பேரானூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் வீரசேகர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வீரசேகரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில், எனது தந்தை முத்து, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1½ லட்சம் வட்டிக்கு வாங்கினார். இந் நிலையில் தற்போது எங்கள் அப்பா வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர்ந்து ரூ.12 லட்சம் தர வேண்டும் எனக்கூறி சுப்பிரமணியன் தரப்பினர் அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி மாலையில் சுப்பிரமணியன் தரப்பினர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்து எனது அப்பா முத்து, தங்கை ஐஸ்வர்யா, பாட்டி சவுந்தரம் ஆகியோரை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர். இதில் காயமடைந்த 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருப்புனவாசல் போலீசில் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீடு புகுந்து 3 பேரையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் வீட்டில் இருந்து எடுத்து சென்ற ஆவணங்களை வாங்கி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்