பொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

பொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-01-21 22:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன், கட்டிட மேஸ்திரி. இவருக்கும், பொம்மிடி அருகே உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் கணவர் அர்ச்சுனன் குடும்பம் நடத்த அழைக்கவில்லையே என ரோஜா மனமுடைந்து காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை ரோஜா தனது 3-வது மகள் ஜெயலட்சுமி (7)-யை அழைத்து கொண்டு பால் வாங்கி வருவதாக கூறி சென்றார். பின்னர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் மகள் ஜெயலட்சுமியை தள்ளி கொன்று, விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பால் வாங்கி வருவதாக கூறி சென்ற ரோஜா வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றதாக சிலர் தெரிவித்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது ரோஜா தனது மகளுடன் கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் சென்று தாய்-மகளின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இறந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்