ஏற்காட்டில் படகு இல்ல பகுதியில் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

ஏற்காடு படகு இல்ல பகுதியில் கடைகள் வைக்க அனுமதிக்க கோரி சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;

Update:2019-01-22 04:12 IST

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவுவாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இவர்கள் மனு கொடுக்க வருபவர்களிடம் மண்எண்ணெய், தீப்பெட்டி, புகையிலை பொருட்கள் ஏதேனும் உள்ளனவா? என்பதை சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுப்பினர்.

வாழப்பாடியை சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் பெண் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மண்எண்ணெய் பாட்டிலை சேலைக்குள் மறைத்து வைத்திருந்தார். இதை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஏற்காடு படகு இல்ல பகுதியில் கடைகள் நடத்தி வந்த சாலையோர வியாபாரிகள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘ஏற்காடு படகு இல்ல சாலையோரங்களில் சுற்றுலா பயணிகளுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் கடைகள் நடத்தி வருகிறோம். சீசன் காலங்களில் மட்டும் வருவாய் கிடைக்கும். இந்தநிலையில் அங்கு வியாபாரம் செய்யக் கூடாது என்றும், கடைகளை காலி செய்யுமாறும், எங்களுக்கு அதிகாரிகள் நோட்டீசு கொடுத்துள்ளனர். இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்‘ என்றனர்.

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோபுரம் அமைப்பதினால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை அறிந்துள்ளோம். எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆகையால் இந்த செல்போன் கோபுரத்தை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பூவனூர் பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில், ஏரி மற்றும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேட்டூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘மேட்டூரை சேர்ந்த ஒருவர், மேட்டூர், தாரமங்கலம், அந்தியூர் உள்பட 5 இடங்களில் நகைக்கடையை தொடங்கி நடத்தி வந்தார். இந்த கடையில் பணத்தை முதலீடு செய்தால் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பி ஏராளமானவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால் அவர் அந்த பணத்தை மோசடி செய்துவிட்டு திடீரென தலைமறைவாகி விட்டார். நகைக்கடைகளும் மூடப்பட்டன. விசாரித்ததில் அவர் எங்களை போன்று பலரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்