பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2019-01-21 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பி.டி.ஏ. பவுண்டேஷன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கத்தின் தலைவர் ரங்கநாயகி தலைமையில் சிலர் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘பி.டி.ஏ. பவுண்டேசன் நிறுவனம் தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் காப்பீடு செய்து இருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,100 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது மதுரை குற்றப்பிரிவு, மதுரை ஐகோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு, புதுடெல்லி சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு நடந்து வருகின்றன. மும்பையை சேர்ந்த செபி நிறுவனம் தீர்ப்பு கூறிய பிறகும் இதுவரை பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தை திருப்பித் தரவில்லை. எனவே, பொதுமக்களின் பணத்தை இந்த நிறுவனத்திடம் இருந்து விரைவில் மீட்டுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில், மகளிர் விடுதலை இயக்க பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சத்தியா மற்றும் மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘மேல்மங்கலம் 10-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட காலனி வீடுகள் ஆகும். தற்போது 100 வீடுகளில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடு இல்லாதவர்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த காலனிக்கு பின்புறம் அரசு நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

போடி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘பத்ரகாளிபுரத்தில் 5-வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீரை சேமித்து வைத்து குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எந்த நேரத்தில் குடிநீர் வருகிறது என்று தெரியாமல் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்