ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு, மேலப்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை

ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-21 23:47 GMT
நெல்லை, 

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 2 ஆயிரத்து 800 அரசு நடுநிலை, தொடக்க பள்ளிக்கூடங்களில் புதியதாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்ற பிற பள்ளிக்கூடங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மேலப்பாளையம் ஆமீன்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய ஆசிரியைகள் அன்னதேவகி, தீபா ஆகியோரை பாளையங்கோட்டையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு பாடம் எடுக்க இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த 2 ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று ஆமீன்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி ரேணுகாதேவி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்