மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு தக்கலை அருகே பரிதாபம்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்-கல்லூரி வேன் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-01-22 23:00 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சரவணன் (வயது 19), கொத்தனார். பன்றி வெட்டான்விளையை சேர்ந்த தேவதாசன் மகன் ஜோகில் (17). இவர் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்த சதாசிவன் மகன் ஷாஜி (18), நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சரவணன், ஜோகில், ஷாஜி ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்க மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார்.

பிலாங்காவிளை பகுதியை சென்றடைந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த வேன் வந்தது. அந்த சமயத்தில் திடீரென மோட்டார் சைக்கிளும், கல்லூரி வேனும் மோதிக் கொண்டன.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள், உடனே 108 ஆம்புலன்சுக்கும், தக்கலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் விரைந்து வந்து, விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினார்.

இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் உள்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்