ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரசு பள்ளிகள் மூடப்பட்டன மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்

ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூரில் அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

Update: 2019-01-22 22:30 GMT
திருவாரூர்,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 3,500 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் திருவாரூரில் நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

திருவாரூர் மாவட்டத்தில் 1,278 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் மூடப்பட்டன.

திருவாரூர் அருகே விளமலில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிக்கு எந்த ஆசிரியரும் வராததால் அனைத்து வகுப்பறைகளும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பள்ளிக்கு வழக்கம்போல் வந்த மாணவர்கள் வகுப்பறைகள் பூட்டி கிடந்ததால் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப சென்றனர். இதே போல மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பள்ளி மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

கஜா புயல் காரணமாக பள்ளிகளுக்கு அதிக நாள் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக மாணவர்்களுக்கு பாடம் எடுக்க முடியாத சூழல் உருவாகியது. இந்தநிலையில் தற்போது பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்்களுக்கு உரிய நேரத்தில் பாடத்திட்டத்தினை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்