நாமக்கல்லில், நின்று கொண்டிருந்த மினிலாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்; பள்ளி மாணவி சாவு

நாமக்கல்லில் நின்று கொண்டு இருந்த மினிலாரி மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-22 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் சாமிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இவர் தனது ஆட்டோவில் சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த ஆட்டோவில் ராஜேந்திரனின் மனைவி சுகன்யா (33) மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

நாமக்கல் வள்ளிபுரம் பைபாஸ் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மினிலாரி மீது சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா (10) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தனிஷ்காவை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தனிஷ்கா இறந்து விட்டாள்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தனிஷ்கா நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்