பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு– பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவு

இளம்பெண் பாலியல் பாலத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு, பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2019-01-22 23:00 GMT

மதுரை,

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–

எனது மகள் ஒரு ஜவுளிக்கடையில் 3 வருடங்களாக வேலை செய்தாள். இந்த நிலையில் அந்த கடை உரிமையாளரின் நண்பர் விருந்து வைப்பதாக கட்டாயப்படுத்தி எனது மகளை அழைத்து சென்றார். சம்பவத்தன்று மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தாள். அவளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அவளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் சின்னப்பா என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. எனது மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிறர் பணபலம் மிக்கவர்கள். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து தண்டிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேற்று முன்தினம் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இளம்பெண் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாருடன் ஆஜராகி, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வேண்டும் என்றும், எதிர்தரப்பினரிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை நீதிபதிகளிடம் அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும். அந்த பெண்ணுக்கு ஆயுதம் ஏந்திய பெண் போலீசை பாதுகாப்புக்காக உடனடியாக நியமிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்