திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-01-22 23:14 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடி குயிலம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 30). இவர், நேற்று காலையில் தனது 4 வயது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக கார் நிறுத்தும் இடம் அருகே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை அவரது மீது ஊற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அங்கு வந்து சங்கீதாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது, தனது கணவர் பெயர் அய்யனார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து கலெக்டர் கந்தசாமி, போலீசாரிடம் அவரை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து போலீசார், சங்கீதாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்