மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

Update: 2019-01-22 23:36 GMT
கடலூர்,

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந்தேதி(நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்து இருந்தது.

ஆனால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒழுங்கு விதிகளின் 20, 22 மற்றும் 22 ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாகும் என்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து இருந்தது.

ஆனால் அரசின் எச்சரிக்கையைப்பொருட்படுத்தாமல் கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் 58 சதவீதம் பேரும், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் 87 சதவீதம் பேரும் பங்கெடுத்தனர். இதனால் பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகள் மூடிக்கிடந்ததால் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

சிதம்பரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகள், பள்ளிக்கூடம் பூட்டிக்கிடந்ததை கண்டு ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

இதே போல் பெண்ணாடம், ராமநத்தம், தொழுதூர், பெரங்கியம், ராமநத்தம் காந்திநகர் ஆகிய பள்ளிகளில் மாணவர்கள் மட்டும் இருந்தனர். சில பள்ளிகள் பூட்டியிருந்தன. ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர்.

இந்தநிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மூடிக்கிடந்த பள்ளிகளை தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர்களைக்கொண்டு திறக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அந்த நாளுக்குரிய சம்பளம் வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியலை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் இருந்து முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் சேகரித்தனர்.

இதேப்போல் அரசு ஊழியர்களும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடலூர் தாலுகா அலுவலகத்தில் 70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒட்டுமொத்தமாக 22.46 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லையென்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்