‘காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்’ முதல்-மந்திரி குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை

காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை கூறினார்.

Update: 2019-01-29 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், எங்கள் முதல்-மந்திரி சித்தராமையா தான் என்று கூறுகிறார்கள்.

மேலும் காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேகவுடா குடும்பம் பற்றி விமர்சனம் செய்தார். பெங்களூருவின் வளர்ச்சியில் குமாரசாமி அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடர்ந்து பேசினால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார்.

அப்போது தேவேகவுடா, “காங்கிரசாரின் விமர்சனத்திற்கு உடனே கருத்து கூற வேண்டாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியது தவறு. அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க வேண்டாம். அவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்