விபத்து ஏற்படுவதற்கு காரணமான ரவுண்டானாவின் அளவை குறைக்காவிட்டால் இடிப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எச்சரிக்கை

திருவெறும்பூர் அருகே விபத்து ஏற்படுவதற்கு காரணமான ரவுண்டானாவின் அளவை குறைக்காவிட்டால் இடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எச்சரிக்கை செய்துள்ளது.

Update: 2019-01-29 22:45 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கணேசா ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதாலும், அதன் சாலை சறுக்கலாக அமைந்துள்ளதாலும் வாகனங்கள் வந்து திரும்பும் போது சாய்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த ரவுண்டானாவின் அளவை குறைக்ககோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் ரவுண்டானாவின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பேசும்போது, விபத்து ஏற்படுவதற்கு காரணமான கணேசா ரவுண்டானாவின் அளவை குறைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு செல்லும் அதிகாரிகள் அதன்பிறகு அதனை கண்டு கொள்வதில்லை.

ஆகவே, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரவுண்டானாவின் அளவை குறைக்காவிட்டால் நாங்களே முன்னின்று அதனை இடித்து தள்ளுவோம் என்றனர். 

மேலும் செய்திகள்