மாவட்டம் முழுவதும், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு அலுவலர் ஒன்றியத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திண்டுக்கல்,
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
இளைஞர்கள் வேலையை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள் 54 பேரும், துணை தாசில்தார் கள் 59 பேரும் உள்ளனர்.
இதேபோல் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 206 பேரும், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 62 பேரும், கிராம நிர்வாக அலுவலர்கள் 236 பேரும், கிராம உதவியாளர்கள் 312 பேரும், அலுவலக உதவியாளர்கள் 46 பேரும், டிரைவர்கள் 27 பேரும், இதர ஊழியர்கள் 62 பேரும் உள்ளனர்.
இதில் 49 தாசில்தார்கள், 51 துணை தாசில்தார்கள், 182 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், 55 இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், 11 கிராம உதவியாளர்கள், 35 அலுவலக உதவியாளர்கள், 27 இதர ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 37.8 சதவீதம் பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அரசு அலுவலர் ஒன்றியத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் உள்ள அலுவலக பணியாளர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோர்ட்டுகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணிகள் பாதிப்படைந்தன.